396 Viewsமாற்றம் என்பது காலங்காலமாக பின்பற்றப் பட்டுக்கொண்டிருக்கும் சிந்தனைகளிலும் செயல்களிலும் ஏற்படும் மாறுபாடாகும். நிரந்தரமான நீண்ட மாற்றங்களை கொண்டதாகவும் அமையும் ,சில சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப தற்காலிகமானதாகவும் அமையும். அறிவுக்கு முதலிடம் கொடுத்து சிந்திக்கும் போது நிரந்தரமானதாகவும் ,உணர்ச்சிகளுக்கு முதலிடம் கொடுத்து சிந்தனையல்ல யோசிக்கும் போது தற்காலிகமானதாகவும் அமையும்.


தமிழ் மக்களும் மாற்றங்களை விரும்பினாலும்,அவ்வப்போது உணர்ச்சிகளுக்கு முதலிடம் கொடுத்து சிந்தனை வயப்பட்ட சந்தர்ப்பங்களே அனேகமுண்டு. 78 இல் இருந்து நிறைவேற்று சனாதிபதி முறை நடைமுறைக்கு வந்தபோது ,இரண்டு சனாதிபதிகளை நாம் இவ்வாறுதான் உணர்ச்சி மாற்றங்களுக்கு உட்பட்டு தெரிவு செய்தோம்.

சந்திரிகா அலை,மைத்திரி அலை. மாற்றம் எதுவும் பெரிதாக நடக்கவில்லை.அடிப்படை மாறாதபோது எதுவும் நடக்காது ,ஆட்கள் தான் மாறுகிறார்களே தவிர ஆசனம் மாறவில்லை என்ற அடிப்படையைக் கூட புரிந்து கொள்ள மறுக்கிறோம்.


தமிழ் காங்கிரசுக்கு மாற்றாக தமிழரசுக் கட்சியையும், சைக்கிளுக்கு மாற்றாக வீட்டையும் பின் உதயசூரியனையும் மீண்டும் வீட்டையும்,ஐ.தே.கட்சிக்கு பதிலாக ஸ்ரீலங்கா.சு.கட்சியையும் தான் மாறி மாறிப் பார்க்கின்றோமே தவிர அதன் அடிப்படைக் கொள்கைகளைப் புரிந்து கொள்ளவில்லை.அந்த சிந்தனை மாற்றம் வந்திருப்பின் இடதுசாரிகள் வளர்ச்சியடைந்திருப்பர்.

எப்படியோ காலங்காலமாக மக்கள் மாற்றங்களை  விரும்பி நிற்பினும் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தங்கள் சுயநல முகத்தையே மாற்றமாகக் காட்டி மறைந்து,மறைத்து விடுவர்.


இப்போதும் இந்தக்காலத்திலும் யுத்தத்தாலும் பொருளாதார சீர்கேடுகளாலும் அரசியல் வியாபாரிகளாலும் ஏமாற்றம் அடைந்து விரக்தியுற்று வாழ்வைத் தொலைத்து மாற்றம் ஒன்றை அவாவி நிற்கின்றனர் என்பது மாபெரும் உண்மை.இந்த மாற்றம் அறிவுபூர்வமான சிந்தனை மாற்றமாக இடம்பெற வேண்டும். இந்த மாற்றத்தை அறுவடை செய்ய பல போலி மாற்றீடுகளை படம் காட்ட அரசியல் வியாபாரிகள் தயாராகி வருகின்றனர்.


உண்மையில் மாற்றீடு என்பது என்ன?


காலங்காலமாக தமிழர்,தமிழ்,தேசியம் ,உரிமை என்ற சொற்களை உச்சாடனம் பண்ணிக் கொண்டு நாடாளுமன்ற ஆசனங்களை பெறுவதும் அதிகரிப்பதுமாக செய்கைகளையே ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் மேற்கொண்டு வந்திருக்கின்றனர்.

ஆனால், உண்மையை உரசிப்பார்க்கும் போது பின்நோக்கி சென்று கொண்டிருக்கின்றோமே தவிர ,முன்நோக்கி சென்றதாக தகவல்களும் தடயங்களும் உறுதிப்படுத்த வில்லை. நாடாளுமன்ற அரசியல் பாதையில் மாற்றங்களை மக்கள் விரும்பி,அதற்காக தங்கள் வாக்குரிமையை பயன் படுத்த வேண்டுமென்ற அலை வடகிழக்கில் தோன்றியுள்ள சூழலில் , அதே மேட்டுக்குடி வகுப்பினர் புதிய தலைமை வந்து விடக்கூடாது எனும் சிந்தனையில் மிகத்தெளிவாக இருக்கின்றனர்.


உதாரணமாக வடக்கில்  உரிமைகளையும் அபிவிருத்தியையும் பேசும் தோழர் டக்லஸ் தேவானந்தாவின் கட்சியோ,ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பேசும் தோழர் சி.க.செந்தில்வேலின் கட்சியோ வந்துவிடக்கூடாது என்பதுடன் தமிழரசுக் கட்சிக்கு மாற்றீடு தாங்கள் தான் என்று கூறிக்கொண்டு  அரசியலே தெரியாமல் நேற்று முளைத்த விக்கி பானையுடனும், பேரன் தாத்தாவின் சைக்கிளுடனும் ,சங்கரியார் சூரியனுடனும் களம் காண இறங்கியுள்ளனர்.

மக்கள் இவைகளை விட சற்று வித்தியாசமாக சிந்திக்கக் கூடாது என்பதில் மிகக் கவனமாக உள்ளனர்.அல்லது ஐ.தே.க ,பெரமுன போன்ற சிங்கள தேசியக் கட்சிகளையும் தலைமையையும் தமிழ் மக்களுக்கு மாற்றுக் கட்சியாக கொண்டு வரத்துடிக்கின்றனர்.


கிழக்கிலும் இதே நிலைமைதான் , வீட்டிற்கு மாற்றீடு உதயசூரியன்,பானை ,சைக்கிள் என்று யாழ் ஆதிக்க சிந்தனையுடனும்அல்லது ஐ.தே.க ,பெரமுன,ஜே.வி.பி. என்று பௌத்த சிங்கள சிந்தனையுடனும் மாற்றீடு என்ற நிறுவலை மேற்கொள்ள ஓடுப்பட்டுத் திரிகின்றனர்.

அபிவிருத்தியையும் உரிமையையும் இணைத்துக்கொண்டு குரல் கொடுக்க முனையும் தலைமைகளை கிள்ளிவிட முனைகின்றனர்.அவ்விடயத்தில் மிகக் கவனமாக உள்ளனர்.வடக்கில் இச்சிந்தனையில் பயணிக்கும் டக்லஸ்சையும் கிழக்கில் இச்சிந்தனை வயப்பட்ட பிள்ளையானையும் அவர்தம் கட்சியையும் ஒடுக்குவதில் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றனர்.


உண்மையில் மாற்றீடு,மாற்றுத் தலைமை என்பது என்ன?
தாங்களும் தெளிவில்லாமல் குழம்பி ,மக்களையும் குழப்புவதா?
கதிரைகள் அப்படியே இருக்க ஆட்களை மட்டும் மாற்றுவதா? இதனைத்தான் நீண்ட காலமாக செய்து வந்துள்ளோம்.


சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் வேண்டும்.வாய்ச்சொல்லில் வீரர்களாக இல்லாமல் செயல் வீரர்களாக இருக்க வேண்டும்.
மாற்றங்களை விரும்பாதோர் தங்கள் சேட் பொக்கற்றுக்குள் தயாராகவே வைத்திருக்கின்றனர்.

அன்று துரையப்பா முதல் அமிர்தலிங்கம்,இராசதுரை, ஆலால சுந்தரம்.கனகரத்தினம்,டக்லஸ், கருணா,பிள்ளையான் என்று இன்று வரை ஒரு பட்டியலை.தாங்கள் உத்தமர்கள் என்ற நினைப்பில்.
மாற்றம் அடிப்படையில் நிகழ வேண்டும்.ஒடுக்கப்படுவோர் ஒன்று திரண்டு இழுக்க வேண்டும்.
மாற்றம் நிச்சயம் நிகழும்.

   ச.அபிமணி.