526 Views

கூட்டு ஏன் தோல்வியில் முடிந்தது?

ஒருவாறு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ,தேர்தல் திகதியும் பின் போடப் பட்டுவிட்டது.மட்டக்களப்பு மாவட்டத்தில் 19 அரசியற் கட்சிகளும் 25 சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களை செய்துள்ளன. இப்போது மக்கள் முன் செல்ல வேண்டிய சூழல் வந்தவுடன் ஒற்றுமையைப் பற்றி பேச வேண்டிய சூழலுக்கு அவை தள்ளப்பட்டு ஆளையாள் ஆள் குற்றம் சாட்டத் தொடங்கி விட்டன.
உண்மையில் ஆரம்பத்தில் கிழக்குத் தமிழர் ஒன்றியம் ,பின் அவை இரண்டாகி கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு, ஈழத் தமிழர் பேரவை என்று தொடர்ந்து மட்டக்களப்பு மெதடிஸ்த திருச்சபை வரை நீடித்தது. அவை அவைகளின் பின்னனி காரணமாகவோ ,தங்கள் வகிபாகம் காணமாகவோ ,யதார்த்த அரசியலை சரியாக நோக்கத் தவறியதன் காரணமாகவோ என்னவோ வெற்றிதரவில்லை.

இவை எவற்றிக்கும் அசைந்து கொடுக்க முதலில் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சி தயாராக இருக்கவில்லை. அது தன்னுடைய கூட்டில் டெலோ,புளோட் ஆகிய இரு கட்சிகளைத் தவிர வேறு எவரையும் ஏற்றுக்கொள்ள எந்த சந்தர்ப்பத்திலும் தயாராக இருக்கவில்லை. எனவே தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே விடாப்பிடியாக இருந்தது. கூட்டு என்று வெளிக்கிட்டவர்கள் முட்டி மோதி திரும்பி வந்து விட்டு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பக்கம் தமது பார்வையைத் திருப்பினர்.
அங்கு இவர்கள் செல்லும் போதே இரு கருத்துக்களுடனேயே சென்றதுடன் பல கட்டுப்பாடுகளையும் இவர்களில் பலர் விதிக்கத் தொடங்கினர். ஒன்று தாங்கள் கற்றவர்கள் புத்திஜீவிகள் பிள்ளையானும் அவரின் சகாக்களும் தொண்டனர்களும் கல்வியறிவு குறைவானவர்கள் இவர்களின் தோளில் ஏறி இலகுவாக சவாரி செய்யலாம் என்ற சிந்தனையுடனும், இந்த கூட்டு இணைப்பில் தங்களின் வகிபாகம் என்ன? அதாவது தங்களுக்கான பதவி,அதிகாரம்,பங்கு என தங்களைப்பற்றியே சிந்தித்தவர்களாகவே வந்தனர். இதன் எதிரொலியாகவே கட்சிப்பெயர் மாற்றம்,சின்னம் மாற்றம்,செயலாளர் மாற்றம் என பல கட்டுப்பாடுகள் மேற்கிளம்பின.

ஒரு போராட்ட அமைப்பு ஜனநாயக வழிக்கு வந்து ஒரு கட்சியாக பதிவு செய்து ,ஏற்கனவே ஏகபோக அரசியலை செய்து கொண்டிருக்கும் கட்சிக்கு மாற்றாக தங்களை நிலை நிறுத்தி தங்களுக்கான தனி அடையாளத்தை நிறுவி பலரையும் தம் திசை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கும் கட்சி ஒரு நிமிடத்தில்  தங்கள் சுயலாப அரசியலுக்காக அதனைத்தையும் துறக்கும் என இவர்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்.இதற்காக சிந்திய உயிருக்கும் இரத்தத்திற்கும் வியர்வைக்கும் உழைப்பிற்கும் யார் பதில் சொல்வது.
சிலர் வாக்கு வங்கிகளையோ.ஆளணிகளையோ கவனம் கொள்ளாமல் சமவாய்ப்பு,சமபங்கு,சம அதிகாரம் என பெரிய கட்சி ,சிறிய கட்சி என்றில்லாமல் எல்லாம் சமத்துவம் என்ற நிலையில் நின்றனர்.உண்மையில் மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி சார்ந்து ஒரு கூட்டும்,தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சார்ந்து ஒரு கூட்டும் முன்னெடுக்கப்பட்டிருக்குமாயின் அவை வெற்றி பெற்றிருப்பதுடன்,நாடாளுமன்ற ஆசனங்களையும் அதிகரிக்க வாய்ப்பேற்பட்டிருக்கும்.இப்போது அந்த நிலை மாறிவிட்டது.
தனிநபர் செல்வாக்கு உள்ளவர்கள் என்று கருதப்பட்ட சிலர் தங்கள் தங்களுக்கு ஏற்ற முகாம்களுக்கு புகுந்து கொண்டு கொள்கைகளயும் கோட்பாடுகளையும் தூக்கி எறிந்து விட்டு முகமூடிகளை அணிந்து கொண்டு மக்கள் முன் வருகின்றனர்.சனாதிபதித் தேர்தலில் மொட்டுக்கும் அன்னத்திற்கும் வாக்களிக்கச் சொன்னவர்கள்.இன்று ஒரே முகாமில். கிழக்கின் தனித்துவம் பேசிய பலர் யாழ் மேட்டுக்குடி அரசியலின் கட்சிகளின் பாசறைக்குள். புதுச் சின்னம்,பொதுச் சின்னம் பேசிய பலர் யாழ் மையவாதம் பேசும் மக்களால் ஏலவே நிராகரிக்கப் பட்ட சின்னங்களில் புதிய நடிகர்களாக இவர்கள்.சிலர் சிங்கள தேசியவாத கட்சிகளின் முகாம்களுக்குள் புகுந்து விட்டு வீரவசனங்களை அள்ளி வீசுகின்றனர்.
ஆனால் மக்கள் விரோத ஏகபோக அரசியலைச் செய்பவர்களுக்கு மாற்றாக தங்களை நிலை நிறுத்த யாரும் முனையவில்லை.அப்படிப் பார்த்தால் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிதான் அதனைஒரளவு முன்னெடுக்கிறது.அதனை சிதைப்பதற்காகவே முனைந்து காரியம் கைகூடாமையால்  அவர்களை நோக்கி கற்களை வீசத் தொடங்கியுள்ளனர்.சிறிய உதாரணம்.இன்றைய நிலையில் புலிகள் என்ற சொல்லுடன் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட கட்சி த.ம.வி.பு.கட்சியைத் தவிர ஏதாவது உண்டா?,எதிர்காலத்தில் அப்படி பெயர் வரத்தக்கதாக ஒரு கட்சியை யாராவது பதிவு பண்ண முடியுமா?
இதனை மாற்றவே பலர் ஒற்றைக்காலில் பலர் நின்றனர்.படகு சின்னத்திற்கு வாக்களிக்க மாட்டோம் சின்னத்தை மாற்றிக்கொண்டு வந்தால் தான் வாக்களிப்போம் என்று மக்கள் சொன்னது போல மேசையில் ஏறிக்கொண்டு நின்றனர் சிலர்.
அப்படி பேசிய பலர் உதயசூரியன்,சைக்கிள்,பானை என்று யாழ் கட்சிச் சின்னங்களின் கீழும்,மொட்டு,மணிக்கூடு(மணி), தொலைபேசி என்று சிங்கள தேசியவாத கட்சிகளின் கீழும் ஒழிந்து கொண்டு கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடுகின்றனர்.மக்களுக்கு எல்லாம் தெரியும்.
அப்படியானால் கூட்டு யாருக்காக? மாற்றம் யாருக்காக?  மாற்றீடு யாருக்காக? தனித்துவம் யாருக்காக?தலைமைத்துவம் யாருக்காக?

       ச.அபிமணி.